திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த ஐயப்ப பக்தரிடம் பணம் மற்றும் செல்போனைத் திருடிய இருவரைப் பொதுமக்களே விரட்டிப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாகக் கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று காலை திருவண்ணாமலையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் குழுவாகத் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர்.
அப்போது கோவில் தெப்பக்குளத்தில் நீராடச் சென்ற ஐயப்ப பக்தர் ஒருவர், தனது செல்போன் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணத்தைத் தெப்பக்குளப் படிக்கட்டு அருகே துண்டால் மூடி வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் மற்றும் பணத்தைத் திருடியதுடன், அங்கிருந்து வெளியே நின்றிருந்த தனது கூட்டாளிகளிடம் அவற்றை வீசியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கவனித்த அங்கிருந்த பொதுமக்கள், திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் துரத்திச் சென்றனர். இதில் ஒருவரை மடக்கிப் பிடித்துத் தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், தப்பியோடிய மற்றொரு நபரைத் திருச்செந்தூர் அம்பேத்கர் சிலை பின்புறம் உள்ள சாக்கடைப் பகுதியில் விரட்டிப் பிடித்தனர். இதனிடையே மற்றொரு நபர் தப்பியோடியதாகத் தெரிகிறது. தொடர்ந்து, பிடிபட்ட இருவரையும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட இருவரும் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், காயல்பட்டினத்தில் கட்டிடத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
பக்தர்கள் வேதனை
சம்பவம் குறித்துப் பொதுமக்கள் முதலில் கோவில் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தபோது, போலீசார் சம்பவ இடத்திற்கு வரத் தாமதமானதாகவும், பொதுமக்களே திருடர்களை விரட்டிப் பிடித்து ஒப்படைத்த பின்னரே போலீசார் வந்ததாகவும் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டுத் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்களும் பக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

