கோவில்பட்டியில் நடந்த புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் கல்லூரி மாணவிகள் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்,தடுக்கும் முறைகள்,குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இதில் ஜங்க் புட் உணவுகளை தவிர்த்து,சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டு புற்று நோய்களை தடுத்திட வலியுறுத்தி நடந்த ஃபேஷன் ஷோவில் மாணவிகள் ஜங்க் புட் மற்றும் சத்தான உணவுகள்,புற்றுநோயை தடுக்கும் முறைகள் குறித்த ஆடைகளை அணிந்து வந்து அசத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர்கள் சுல்தான் சம்சுல் கரீம்,விக்னேஸ்வரன், கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி ரோட்டரி சங்க தலைவர் ஜெபின் ஜோஸ் அனைவரையும் வரவேற்றார்.

ரோட்டரி மாவட்ட புற்றுநோய் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் நர்சிங் மாணவிகளிடம் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது. கர்ப்பப்பை புற்று நோய்க்கு தடுப்பூசி உள்ளது.

பெண்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி புற்றுநோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.மாணவிகள் அனைவரும் புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் இவ்வாறு பேசினார்.

CancerAwareKvp.jpg

இதில் கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரமேஷ் குமார், சீனிவாசன், நடராஜன், நர்சிங் கல்லூரி ஆசிரியர்கள் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பரமக்குடி ரோட்டரி சங்க செயலாளர் செல்லம்பாண்டியன் நன்றி கூறினார்.