தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மதியம் வடமாநிலத்திலிருந்து உயரமான கண்டெய்னர் லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரி வி.வி.டி. சிக்னலைக் கடந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் திரும்பியபோது, மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார வயரில் உரசி மோதியது. இதில் மின்சார ஒயர்கள் அறுந்து சாலையில் விழுந்தன.
போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மருத்துவமனை சாலையில் உயர் அழுத்த மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததால், அப்பகுதியில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட அப்பகுதி மக்கள், பொதுமக்கள் யாரும் அறுந்து கிடந்த மின்சார ஒயரைத் தொட்டுவிடாமல் இருக்கப் பாதுகாப்பாக நின்று எச்சரித்தனர். அதேபோன்று, அங்குப் பணியில் இருந்த போக்குவரத்துப் போலீசாரும் விரைந்து செயல்பட்டுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர், மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து விழுந்த மின்சார வயர்களை மீண்டும் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்சார வயர் அறுந்து விழுந்த நேரத்தில் அந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

