வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக விதிக்கப்பட்ட தடையை மீறி, தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்த தூத்துக்குடி மீனவர்களிடமிருந்து 2 டன் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், 31 மீனவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புயல் தடையை மீறி கடலுக்குச் சென்ற மீனவர்கள்: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது படகுகளைக் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி விவேகானந்த நகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் 4 நாட்டுப்படகுகளில் நேற்று (நவம்பர் 19) மதியம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் மீன்பிடித்துவிட்டு நேற்று இரவு மீண்டும் கரைக்குத் திரும்பினர்.
இது குறித்துத் தகவலறிந்த மீன்வளத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம், கடல்வளம் அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த 4 படகுகளையும் மடக்கிப் பிடித்து இனிகோ நகர் பகுதிக்குக் கொண்டு வந்தனர்.
அந்தப் படகுகளில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி அவர்கள் மீன்பிடித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 படகுகளிலிருந்தும் சுருக்குமடி வலைகள் மற்றும் சுமார் 2,000 கிலோ (2 டன்) மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், படகிலிருந்த 31 மீனவர்கள் மீதும் மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

