தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களிலும், பக்கிள் ஓடை போன்ற பகுதிகளிலும் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கும் பொருட்டுச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இரவு நேரக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இரவு நேரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் பக்கிள் ஓடை மற்றும் குப்பை கொட்டும் வாய்ப்புள்ள இடங்கள் (Garbage Vulnerable Points) உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்தக் கண்காணிப்பின் போது பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டுபவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குவதோடு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை நான்கு வகையாகத் தரம் பிரித்து, மாநகராட்சிப் பணியாளர்களிடம் மற்றும் வாகனங்களில் மட்டுமே வழங்கி நகரைத் தூய்மையாகப் பராமரிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

