புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்குக் காரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாகப் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து, தலைமைக்காவலர்கள் ஜெயக்குமார் மற்றும் சுரேஷ் கனி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஸ்விஃப்ட் காரை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாகப் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த திருநெல்வேலி அபிஷேகப்பட்டியைச் சேர்ந்த சின்னப்பாண்டி (47) மற்றும் தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளத்தைச் சேர்ந்த வேலுமுத்துராஜா (36) ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

காரில் இருந்த பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த 147 மதுபாட்டில்கள், ரூ.18,500 ரொக்கம், 2 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.