தூத்துக்குடி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கத் திருத்தத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 12.11.2026 அன்று வெளியிடப்படுகிறது.
நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கத் திருத்தத்தை அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 12.11.2026 அன்று வெளியிடப்படும். 12.11.2026 முதல் 11.12.2026 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.இந்த விண்ணப்பங்கள் 28.12.2026 வரை பரிசீலனை செய்யப்பட்டு, 04.01.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
01.01.2027 அன்று அல்லது அதற்கு முன் 18 வயது நிறைவடைவோர் மற்றும் 2027 ஏப்ரல் 1, ஜூலை 1 அல்லது அக்டோபர் 1 அன்று தகுதி பெறுவோர் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர்கள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் (பள்ளி/கல்லூரி/அலுவலகங்களில்) உள்ள வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்களிடம் அலுவலக வேலை நேரங்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் அளிக்கலாம்.
வாக்காளர்கள் படிவங்களை voters.eci.gov.in இணையதளம் அல்லது ECINET செயலி வழியாக இணையவழியாகவும் நிரப்பலாம்.
சிறப்பு முகாம்கள் - உதவி எண்கள்:
வாக்காளர் பதிவை எளிதாக்கும் வகையில், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் நவம்பர் 21, 22, 28, 29 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
புலம் பெயர்ந்தோர் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளோர் வாக்காளர்களாகப் பதிவு செய்ய உதவ மாவட்ட மற்றும் வட்ட அளவில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்த மேலதிக தகவல்களை அறிய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். எனவே, இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதோர், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மற்றும் நீக்கம் தேவைப்படுவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

