தூத்துக்குடி மாவட்டம், வெள்ளாளன்விளையைச் சேர்ந்த சுந்தர் டேனியல் என்பவரது மனைவி ரெஜினா (42), தனது கணவர், மகள் மற்றும் மகனுடன் தீபாவளி ஷாப்பிங் செய்வதற்காக உடன்குடிக்கு வந்துள்ளார்.

பின்னர் ரெஜினா மற்றும் அவரது மகன் ஜிடேன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் உடன்குடி தனியார் திருமண மண்டபம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் திடீரென ரெஜினாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கம் சங்கிலியைப் பிடித்து இழுத்துப் பறித்துள்ளார். சங்கிலியைப் பறித்துக்கொண்ட அந்த நபர், அங்கிருந்து பரமன்குறிச்சி நோக்கித் தனது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து ரெஜினா அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.