தூத்துக்குடியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி 39-வது வார்டில் தவெகவைச் சேர்ந்த திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில், சிவன் கோவில் கீழரத வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பொதுமக்களின் நலனுக்காக நாள்தோறும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்ட தீபாவளிப் பரிசுகளை வழங்கினார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களின் உழைப்பையும் சேவையையும் பாராட்டும் வகையில் அவர்களுக்குச் சால்வை அணிவித்து திருச்சிற்றம்பலம் கௌரவித்தார். தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடத் தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

