உலக வரலாற்றில் உழைக்கும் மக்களின் எழுச்சிக்குப் புதிய பாதையமைத்த ரஷ்ய நவம்பர் புரட்சியின் நினைவு தினம் இன்று (நவம்பர் 7) தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் முதுபெரும் தோழரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான இசக்கிமுத்து செங்கொடியேற்றி வைக்க, கட்சியினர் மற்றும் வாலிபர், மாணவர் சங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, சுரண்டலற்ற சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கவும், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாக்கவும் தொடர்ந்து போராடுவதாக இந்நிகழ்வில் உறுதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ்விழாவில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா புவிராஜ், மாநகரச் செயலாளர் முத்து, ஒன்றியச் செயலாளர் தோழர் சங்கரன், மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், கருப்பசாமி, இனிதா, நாகராஜ் மற்றும் ராமர், மணவாளன், மனோஜ், முத்துகிருஷ்ணன், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நேசமணி, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

