கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வரும் வாலிபர், வரும் 23-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால் 'தேடப்படும் குற்றவாளியாக' அறிவிக்க நேரிடும் எனத் தூத்துக்குடி நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது மகன் பிரவீன்குமார் என்கிற கண்ணன் (30). இவர் மீது தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கண்ணன், பின்னர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால், ஜாமீனில் வெளியே வந்த பிறகு அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இதையடுத்து, வரும் நவம்பர் 23-ஆம் தேதி தூத்துக்குடி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்-2-ல் கண்ணன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும், அவ்வாறு ஆஜராகத் தவறும் பட்சத்தில் அவரைத் 'தேடப்படும் குற்றவாளியாக' அறிவிக்க நேரிடும் என்றும் மாஜிஸ்திரேட் இலக்கியா உத்தரவிட்டுள்ளார்.