தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடியதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பண்டிகைக்கு மறுநாள் மாபெரும் சிறப்புத் தூய்மைப் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
பண்டிகைக் கொண்டாட்டங்களால் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் பட்டாசுப் குப்பைகள் குவிந்தன. இதனை அகற்றும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதில் மாநகர் முழுவதும் குவிந்திருந்த 31.5 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் முழுமையாக அள்ளப்பட்டு அகற்றப்பட்டன.
பேருந்து நிலையம், காய்கறி சந்தைப் பகுதிகள், பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டன. மாநகரை விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்கள் பட்டாசு கழிவுகளைச் சாலைகளிலோ அல்லது சாக்கடை நீர்வரத்துக் கால்வாய்களிலோ கொட்டக் கூடாது என்றும், மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் மட்டுமே நேரடியாக வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

