மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் மீனவர்கள் 24 பேர் பத்திரமாக தாயகம் திரும்பினர். மீனவர்களின் விமானப் பயணச் செலவினை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டது.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மூன்று ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடந்த 13.10.2026 அன்று மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் தொடர் முயற்சிகளின் அடிப்படையிலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஆணையம் ஆகியவற்றின் வாயிலாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்து தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, நேற்று (08.11.2026) பத்திரமாக தாயகம் திரும்பினர். மீனவர்களின் விமானப் பயணச் செலவினை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டது.
திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களை தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வரவேற்றனர். தொடர்ந்து, அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

