தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளம் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மகன் சுடலைமணி (26). இவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சுடலைமணி, தனது மனைவியைப் பயமுறுத்தும் நோக்கத்தில் வீட்டில் இருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை எடுத்துக்குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அங்கு ஒரு வார காலமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி சுடலைமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துக் கயத்தாறு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியைப் பயமுறுத்த முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.