நைரோபியில் நடைபெற்ற தேர்தலில், உலக நோயாளிகள் கூட்டணியின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான ஆலோசனைக் குழு உறுப்பினராகத் தூத்துக்குடியைச் சேர்ந்த 'எம்பவர்' ஆ.சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலக நோயாளிகள் கூட்டணியின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான ஆலோசனைக் குழு உறுப்பினராக 'எம்பவர்' ஆ. சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான தேர்தல் கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்றது.

ஆ.சங்கர் தற்போது தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பொறுப்புத் தலைவராகவும், தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையின் வட்டார தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டு குழுவின் செயல் இயக்குநராகவும், சர்வதேச அளவில் நுரையீரல் நோய் பவுண்டேஷனின் தலைவராகவும், இந்திய விமானப் பயணிகள் சங்க நிறுவனராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் தேசிய அளவிலான தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவர், இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பின் தலைவர் மற்றும் தமிழ்நாடு மூத்த பெரு மக்கள் நல இயக்கத்தின் நிறுவனராகவும் உள்ளார்.

சர்வதேசப் பங்களிப்பு:

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றுள்ள இவர், அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். விருதுகள்: கடந்த 42 ஆண்டுகளாகச் சமூகப் பணியில் ஈடுபட்டு வரும் இவர், 'நுகர்வோர் ஊற்று', 'நுகர்வோரே உங்களுக்காக' உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். 2011-ல் மாநில நுகர்வோர் பாதுகாப்பு விருதைப் பெற்றுள்ளார்.

உலக நோயாளிகள் கூட்டணி என்பது உலகளவில் நோயாளிகளுக்கான மிகப்பெரிய அமைப்பாகும். பாதுகாப்பான, தரமான மற்றும் மலிவு விலையிலான சுகாதாரச் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யவும், நோயாளிகளின் குரலை சர்வதேச அளவில் வலுப்படுத்தவும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.