தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பட்டி சோசைட்டி பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் பூபாலராயபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணி(54) என்பவர் மது வாங்க வந்தார்.
அப்போது காலி பாட்டிலுக்கு 10 ரூபாய் வழங்குவதில் வாடிக்கையாளர் அந்தோணிக்கும் பார் ஊழியர் சாம்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பார் ஊழியர் காய்கறி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியால் அந்தோணியின் வயிற்றில் குத்தினார்.
இதில் அந்தோணிக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல் ராஜ் வழக்குப்பதிவு செய்து பார் ஊழியர் சாம்சனை கைது செய்து சிறையிலடைத்தனர். அரசு மதுபான கடையில் 10 ரூபாய் விவகாரத்தில் வாடிக்கையாளரை கத்தியால் குத்திய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

