தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் நேற்று கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்களுக்குக் கடலில் மீன்பாடு சிறப்பாக அமைந்ததால், பெரிய அளவிலான மீன்கள் அதிகளவில் கிடைத்தன. இதன் காரணமாகத் திரேஸ்புரம் துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து வழக்கத்தை விடக் அதிகமாகக் காணப்பட்டது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தித் திரேஸ்புரம் ஏலக்கூடத்தில் நேற்று காலை முதலே மீன்களை வாங்குவதற்காகப் பொதுமக்களும் வியாபாரிகளும் திரளாகக் குவிந்தனர்.
நேற்று சீலா மீன் கிலோ ரூ.1,100 வரையும், விளைமீன் கிலோ ரூ.600 வரையும், ஊளி பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையும் விற்பனையானது. மீனவர்கள் அதிகளவில் பிடித்து வந்த ஐலைஸ் மீன் கிலோ ரூ.190 முதல் ரூ.200 வரையும், வங்கனை மீன் கிலோ ரூ.100 வரையும், நண்டு கிலோ ரூ.700 வரையும் விற்பனையானது.
மீன்களின் வரத்து அதிகமாக இருந்தபோதிலும், பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

