ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பட்டாசுகளுடன் ரயிலில் ஏற முயன்ற மதுரையைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல இரயில்வே நிர்வாகம் கடும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் விதிமீறலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயிலில் கொண்டு செல்வதற்காக, கோவில்பட்டி ரயில் நிலையத்திற்குள் டிராலி ஒன்றில் 10 வகையான பட்டாசுகளை வைத்து வாலிபர் ஒருவர் தள்ளிக்கொண்டு வந்துள்ளார். இதை கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் சங்கர பாண்டி, தலைமைக் காவலர்கள் முருகானந்தம் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் அவரை உடனடியாக மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் மதுரை காமராஜபுரம் குமரன் தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரது மகன் டேனியல் அலெக்ஸ் பால் பொன்ராஜ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 10 வகை பட்டாசுகளையும் பறிமுதல் செய்த போலீசார், டேனியல் அலெக்ஸ் பால் பொன்ராஜைக் கைது செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

