தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் வையாபுரி. இவரது மனைவி நிர்மலா (55). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
நிர்மலாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இவரது இரண்டாவது மகளான கார்த்திகா என்பவர், முரளி குமார் என்பவரைக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தில் நிர்மலாவின் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மகள் கார்த்திகாவை நிர்மலா தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்பேரில் கார்த்திகா மட்டும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நிர்மலா தனது மகளிடம், "நீ கணவருடன் செல்லாமல் நமது வீட்டிலேயே தங்கிவிடு" எனக் கூறியதாகத் தெரிகிறது.
இதனால் தாய்-மகள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனஸ்தாபமடைந்த கார்த்திகா மீண்டும் தனது கணவர் வீட்டிற்கே சென்றுவிட்டார். மகள் மீண்டும் கணவர் வீட்டிற்கே சென்றதால் கடுமையான மன வேதனையடைந்த நிர்மலா, வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிர்மலாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

