கோவில்பட்டியில் வாகனத் தணிக்கையின் போது கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் சென்ற நபர்களைக் கண்டறிந்து கைது செய்த காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கொலை செய்யும் முனைப்போடு ஆபத்தான ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த கும்பலைக் கண்டறிந்து கைது செய்த காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் மா. சிவனுத்தாய் தலைமையிலான போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த வாகனத்தை மறித்துச் சோதனையிட்ட போது, கொலை செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற நபர்களைக் கண்டறிந்தனர். உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனைவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

இத்தகைய துரிதமான மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையிலான குற்றத் தடுப்பு நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மா. சிவனுத்தாய், அவருக்கு உறுதுணையாகச் செயல்பட்ட தலைமைக் காவலர்கள் மு. கனிசேகர் மற்றும் ரா. ராஜேந்திரன் ஆகியோரை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு, நேரில் அழைத்துப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி அவர்களின் சிறப்பான பணியைக் கௌரவித்தார்.