தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, தமிழ்கடவுள் முருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருக்கோயில்களில் 2026 ஆம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அன்னதானத் திட்டத்தை விரிவுப்படுத்துதல், கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல், பக்தர்கள் நலன் மற்றும் பணியாளர் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 15 ஆம் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரமும், 16 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.
கந்த சஷ்டி விரதம் தொடங்கும் முதல் ஐந்து நாட்களுக்கு தினம் ஒரு லட்சம் பக்தர்களும், சூரசம்ஹார தினத்தன்று சுமார் ஆறு லட்சம் பக்தர்களும், திருக்கல்யாணத்திற்கு சுமார் இரண்டு லட்சம் பக்தர்களும் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவதால் அவர்களின் தேவைக்கேற்ப சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக 11 இடங்களில் ஒரு லட்சத்து 1,02,673 சதுரடி பரப்பளவில் நிழற் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தங்கும் கொட்டகைகளில் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவை முழுமையாக நிறைவேற்றி தரப்படும். திருக்கோயில் வளாகத்திலுள்ள நிரந்தர கழிவறைகளுடன் 300 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கந்த சஷ்டி திருவிழா போது 15,000 பக்தர்களுக்கு நாள் முழுவதும் அறுசுவை உணவு வழங்கப்படவுள்ளது. திருக்கோயிலுக்கு முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக திருக்கோயில் சார்பாக கட்டணமில்லா நான்கு சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
திருக்கோயில் வளாகங்களில் குடிநீர் வழங்கிட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளது. பொது தரிசனம் மற்றும் முதியோர்கள் தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு 6 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளன.
திருக்கோயில் கடற்கரையில் கடலில் நீராடும் பக்தர்களை கண்காணித்திட ஆறு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 12 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம் மற்றும் 10,000 வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி 493 இடங்களில் சிசிடிவி கேமராக்களும், கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. விழா நாட்களில் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவதோடு ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படுகிறது.
திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தீ விபத்துகளை தடுத்திடும் வகையில் தீயணைப்பு பணியாளர்களுடன் தீயணைப்பு துறை வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் கந்தசஷ்டி நிகழ்வுகளை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி, திரைகள் 26 இடங்களில் அமைக்கப்படுகின்றன.
விழா நாட்களில் திருக்கோயில் மற்றும் அதன் சுற்றுபுறங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் சுமார் 400 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும். திருக்கோயில் சார்ந்த பாதுகாப்பு பணியில் வெளிமுகமையின் மூலம் சுமார் 789 நபர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கவும், விரைவாக தரிசனம் மேற்கொள்ளவும், தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவத்துறை போன்ற அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றன.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால் பக்தர்களும் தங்கி விரதமிருக்கும் வகையில் புதிய சஷ்டி மண்டபம் இந்தாண்டு முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை 03.11.2026 அன்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவத் துறை ஆகிய அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆகவே, இந்தாண்டு கந்த சஷ்டி பெருவிழா வெகு சிறப்பாக பக்தர்கள் மனம் மகிழ்ச்சி அடையும் வகையில் சிறப்பாக அமையும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தெரிவித்ததுள்ளார்.

