முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் விலகியிருப்பது திமுகவில் இருந்து விலகப் போகிறார் என்ற தகவலைப் பரப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட திமுகவின் முக்கியத் தூணாக விளங்கும் அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவில் இருந்து விலகப் போவதாக வெளியாகி வரும் தகவல்கள் தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகக் கட்சிப் பணிகளில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் ஒதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளிடம் கூடப் பேசாமல் மெளனம் காத்து வரும் அவர், ஓரிரு வாரங்களில் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
சமீபத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காகத் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் வந்தபோது, அவரது காரில் திமுக கொடி பறக்கவில்லை என்பது அரசியல் பார்வையாளர்களிடையே பலத்த சந்தேகத்தைக் கிளப்பியது. இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் மகன்கள் உட்பட 7 பேரையும் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
சொத்து வழக்கில் இருந்து முற்றிலுமாக விடுபட்டுள்ள நிலையில், அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் திமுகவிலேயே நீடிப்பாரா அல்லது தமிழக வெற்றிக் கழகம் அல்லது பா.ஜ.க ஆகிய கட்சிகளில் இணையப் போகிறாரா என்ற ஊகங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் சூடுபிடித்துள்ளன.

