வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
மீன்வளத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லாததாலும், ஆழ்கடலிலிருந்து கரை திரும்பிய மீனவர்களுக்கு மீன்பாடு சுமாராகவே இருந்ததாலும் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து குறைவாகக் காணப்பட்டது.
இருப்பினும், நேற்று காலை முதலே மீன்களை வாங்கப் பொதுமக்களும் வியாபாரிகளும் திரேஸ்புரம் துறைமுகத்தில் அதிகளவில் குவிந்தனர். வரத்து குறைவாக இருந்த மீன்களைப் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது.
நேற்று சீலா மீன் கிலோ ரூ.1,000 வரையும், விளை மீன் ரூ.500 வரையும், பாறை மீன் ரூ.400 வரையும், ஊளி மீன் ரூ.350 வரையும், நண்டு ரூ.800 வரையும், ஐலேஷ் மீன் ரூ.240 வரையும், கேரை மீன் ரூ.200 வரையும், வங்கனை மீன் ரூ.100 வரையும் விற்பனையானது.
மீன்களின் வரத்து குறைவால் விலை சற்று உயர்ந்து காணப்பட்ட போதிலும், விலையைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களும் வியாபாரிகளும் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றதால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

