மதுரை - தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை திட்டப் பணியில் ரூ.4 கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக, தெற்கு ரயில்வேயின் ஓய்வுபெற்ற பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை - தூத்துக்குடி இடையிலான புதிய அகல ரயில் பாதை திட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் - மேலமருதூர் இடையிலான 17.75 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. ரூ.120.70 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இப்பணிகளில் ரூ.4 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்த நிலையில், மதுரை ரயில்வே கட்டுமான பிரிவின் அப்போதைய துணை தலைமை என்ஜினீயர் முகமது சாலையா, நிர்வாக என்ஜினீயர் வில்லியம் ஜெய் மற்றும் சில தனிநபர்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

அனுமதியின்றி பாலங்கள் கட்டியதில் இழப்பு

ஒரு சிறிய பாலம் கட்ட மட்டுமே ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்திருந்த நிலையில், உரிய முன் அனுமதி பெறாமல் 2 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் ஒய். சின்ன ரெட்டி என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரே நீர் வழித்தடத்தில் 30 மீட்டர் இடைவெளியில் ரூ.3.59 கோடி செலவில் இந்த 2 பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 மீட்டர் உயரத்திற்கு இந்தப் பாலங்கள் கட்டப்பட்டதால், மண் நிரப்பும் பணி மற்றும் நிலம் கையகப்படுத்தும் செலவு அதிகரித்து ரூ.2.57 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சட்டவிரோத கட்டுமானத்தை நியாயப்படுத்தும் விதமாக, பணிகள் முடிந்து சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி இதற்கான ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இதில் முகமது சாலையா மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சின்ன ரெட்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறையற்ற தடுப்புச்சுவர் கட்டுமானத்தால் இழப்பு

முகமது சாலையா மற்றும் வில்லியம் ஜெய் ஆகியோர் மதுரையைச் சேர்ந்த ஒருவருடன் கூட்டு சேர்ந்து, ரயில்வே விதிமுறைகளைப் பின்பற்றாமல் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர்.

பாலங்கள் கட்டிய பிறகே இந்தத் தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முன்கூட்டியே கட்டப்பட்டதால் பாலத்தின் அணுகுசாலைப் பணிகளுக்குப் போதிய இடமில்லாமல் போய், அந்தத் தடுப்புச்சுவர் மண்ணுக்குள் புதைந்துவிட்டது.

முறையற்ற இந்தத் திட்டத்தால் ரயில்வேக்கு ரூ.1.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.