தூத்துக்குடி மாவட்டம் கே.சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் கணேஷ்குமார் (28), கட்டடத் தொழிலாளி. இவர் புதுக்கோட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கணேஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, காரசாரமான தகராறாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் கணேஷ்குமாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய கணேஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச் சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை பத்திரகாளியம்மன் கோவில் தெரு, மாடசாமி மகன் இன்பரசன் (32), அய்யனார் காலனி சங்கர் மகன் முருகன் என்ற குட்ட முருகன், தெற்கு சிலுக்கன்பட்டி அய்யாசாமி மகன் சதீஷ் (27) ஆகிய 3பேரையும் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

