தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி பாரதி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சிவசக்தி. இத்தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ருத்ரா வைஷ்ணவி. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வரும் மாரியப்பன், கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி சொந்த ஊரான கோவில்பட்டிக்குத் திரும்பியுள்ளார்.

அன்று மதியம் மாரியப்பன் தனது மகள் ருத்ரா வைஷ்ணவியை வெளியில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிய சிறுமி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், தாய் சிவசக்தி காரணம் கேட்டு விசாரித்துள்ளார். அதற்கு, தந்தை மாரியப்பன் தன்னை அடித்ததாகச் சிறுமி கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 15-ஆம் தேதி சிறுமிக்கு திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டதால், கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட சிறுமி, அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுமி உயிரிழந்தது குறித்துத் தாய் சிவசக்தி அளித்த சந்தேகத்தின் பேரிலான புகாரைத் தொடர்ந்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலேயே, சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.