திரேஸ்புரம் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நாட்டுப்படகுகள் சனிக்கிழமை (செப்டம்பர் 19) கரை திரும்பின. மீன்களின் வரத்து வழக்கத்தை விடக் குறைவாகவே இருந்தது. இருப்பினும், விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால் மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகளும் பொதுமக்களும் திரேஸ்புரம் நாட்டுப்படகு துறைமுகத்தில் திரண்டனர்.
தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளதாலும், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா விரதம் தொடங்கியுள்ளதாலும் அசைவ உணவுகளைத் தவிர்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, மீன்களுக்கு எதிர்பார்த்த தேவையின்றி அவற்றின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.
சந்தையில் மீன் வரத்து குறைவாக இருந்தபோதிலும் தேவையின்மை காரணமாகப் பல்வேறு மீன்களின் விலை சரிந்தது. வழக்கமாக ரூ.500 முதல் ரூ. 600 வரை விற்பனையான ஊளி, பாறை, விளை மீன்கள் தற்போது ரூ. 350 முதல் ரூ. 400 வரையும், வங்கனை, சூரை ஆகியவை ஒரு கூடை ரூ. 2,300 வரையும், கேரை கிலோ ரூ. 220, கோலா ரூ. 80, நண்டு ரூ.700 வரையும் விற்பனையானது.

