கர்நாடகாவின் மைசூருவிற்கு அடுத்ததாக, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வரை தசரா விழா கொண்டாடடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தசரா விழா அக்டோபர் மாதம் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிளை சேர்ந்த பக்தர்கள் முத்தாரம்மனுக்கு விரதம் கடைப்பிடித்து காளி, அம்மன், ராஜா, ராணி, அரசகர்கள், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த சமயத்தில் தசரா குழுவினர் மேள, தாளங்களுடன் ஆட்டம் ஆடி செல்வார்கள். இதில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை அழைத்து வந்து நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இந்நிலையில் தான் தசரா விழா நெருங்கி வரும் நிலையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி குலசை தசரா விழாக்களுக்கு சினிமா பிரபலங்களை அழைத்து வர கூடாது. சினிமா பிரபலங்களை அழைத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் உலோக ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது. மேலும் ஜாதி அடையாளத்துடன் பக்தர்கள் வருகை தரக்கூடாது என்று கோட்டாச்சியர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

