தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி மகன் செல்வராஜ் (45), இவர் வழக்கமாக அதிகளவில் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் குடும்பத்தினரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த செல்வராஜ், தனது மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அவரது மூத்த மகன் வெற்றிவேல், "மது அருந்திவிட்டு அம்மாவிடம் தேவையில்லாமல் பிரச்சனை செய்யாதே!" எனத் தந்தையைக் கண்டித்துச் சத்தம் போட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சலும் ஆத்திரமும் அடைந்த செல்வராஜ், வீட்டை விட்டு வெளியேறி தனது வீட்டிற்கு எதிரே இருந்த பாழடைந்த கட்டிடத்திற்குச் சென்று, தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாகக் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இருப்பினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.