தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் புறவழிச் சாலையில் டேவிட் ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கிடங்கு இயங்கி வருகிறது. இக் கிடங்கின் பின்புறத்தில் பைபர் பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு சாமான்கள் மற்றும் வாகன டயர்கள் ஆகியவை பெருமளவில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் அப் பகுதியில் திடீரெனத் தீப்பிடித்தது. சிறிது நேரத்திலேயே தீ வேக பரவி, அப்பகுதி முழுவதையும் அடர்ந்த கருப்புப் புகை மண்டலம் சூழ்ந்தது. இத் தீ விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் தீயணைப்பு வாகனம் மற்றும் திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினர் இணைந்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், இத் தீ விபத்தில் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து ஆறுமுகனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

