தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி அருகே சத்யா நகர் உள்ளது. சத்யா நகர் மூன்றாவது தெரு நடுரோட்டில் அப்பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் மது அருந்துவது பைக் ரேஸில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கடந்த பல மாதங்களாக காவல்துறைக்கு புகார் அளித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி வடபாகம் போலீஸ் ஏட்டுக்கள் பொன் பாண்டியன் மற்றும் கலைவாணன் ஆகியோர் இன்று அப்பகுதியில் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சத்யா நகர் மூன்றாவது தெருவில் நடு ரோட்டில் வைத்து பீர் பாட்டில் மற்றும் மதுபாட்டில்களை அடுக்கிவைத்துக் கொண்டு மது அருந்தியதாக தெரிகிறது.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் அங்கிருந்த 8 க்கும் மேற்பட்ட கும்பல் கையில் இருந்த மது பாட்டில்களை ரோட்டில் வீசியும், அருகில் உள்ள வீடுகளின் மீதும் எரிந்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் தப்பி ஓடியதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் கூறுகையில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமூக விரோத செயல்களிலும், நடுரோட்டில் மது அருந்துவது, பைக் ரேஸில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

