தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்தவர் பால் ஜெபராஜ். இவருக்குப் பேச்சியம்மாள் என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தகராறு காரணமாக, பேச்சியம்மாள் தனது மகனுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சமரசம் ஏற்பட்டு, பேச்சியம்மாள் மீண்டும் கணவர் வீட்டிற்குத் திரும்பி வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பால் ஜெபராஜ் பேச்சியம்மாளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த பேச்சியம்மாள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மனைவியைத் தாக்கிய பால் ஜெபராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.