சோழ மன்னர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய நல்லாட்சியின் சின்னமான செங்கோலின் பெருமையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் 'செங்கோல்' பற்றிய பாடத்தை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) இணைத்துப் புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
'இந்தியா மற்றும் அதற்கு அப்பால் சமூகத்தைப் புரிந்து கொள்ளுதல் - பகுதி 2' (Exploring Society: India and Beyond) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகத்தில் செங்கோல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அப் பாடப்பகுதியில், "ஆட்சி மற்றும் நல்லாட்சியின் கலாச்சாரச் சின்னமான செங்கோல், 2023-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்டது. நீதியான ஆட்சியின் அடையாளமாகச் செங்கோலைப் பயன்படுத்தும் பாரம்பரியம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோழ வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "இந்தியா விடுதலையடைந்தபோது, அதிகாரப் பரிமாற்றத்தின் அடையாளமாக 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தமிழகத்தின் பழமையான திருவாடுதுறை ஆதீனத் துறவிகளிடம் இருந்து இந்தச் செங்கோலைப் பெற்றுக்கொண்டார். உம்மிடி பங்காரு செட்டியால் வடிவமைக்கப்பட்டுத் திருவாடுதுறை ஆதீனத்தால் புனிதப்படுத்தப்பட்ட இச் செங்கோல், காலனி ஆதிக்கத்திலிருந்து இறையாண்மை கொண்ட இந்திய அரசுக்கு அதிகாரப் பரிமாற்றம் நடந்ததன் 'நாகரிகத்தில் வேரூன்றிய' சான்றாகும்" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்த செங்கோல், வெறும் சடங்குப் பொருளாக மட்டுமின்றி, ஆட்சியாளருக்கு வழங்கப்பட்ட அறநெறிப் பொறுப்புகளின் ஆழமான சான்றாக விளங்கியது என்பதை இப் புதிய பாடம் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கிறது.

