நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் விஜிலாராணி மற்றும் போலீசாரை வழிமறித்துத் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளை பகுதியில் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் விஜிலாராணி தலைமையிலான போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இடலாக்குடி வேதநகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன், இருளப்புரம் மற்றும் சுசீந்திரத்தைச் சேர்ந்த தலா 17 வயதுடைய இரு சிறுவர்கள் என மூவர் சேர்ந்து போலீஸ் ரோந்து வாகனத்தை வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜிலாராணி மற்றும் சக போலீசாரை ஆபாசமாகப் பேசியதுடன், அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்துக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.