தென்னகத்தின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமுமான மேலத்திடியூர் பி.எஸ்.என் பல்கலைக்கழகத்தில், மாணவர்களைச் பசுமை இயக்கத்தில் ஈடுபடுத்தும் வகையில் 'விதைப்பந்து தயாரிப்பு' குறித்த முதற்கட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பல்கலைக்கழக முதல்வர் கார்லின் கெலாப் தலைமையில், சக்தி முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உள்தர உறுதிப்பாட்டு அலகின் ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியையுமான ஜோசபின் சுதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட விதைப்பந்து பிரச்சாரகரும் சமூக நல ஆர்வலருமான வெங்காடம்பட்டி பூ. திருமாறன், மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் முறைகள், பசுமை நோக்கம் மற்றும் விதைப்பந்து வீசுவதால் ஏற்படும் நேர்மறை விளைவுகள் குறித்து விரிவாக விளக்கினார்.
பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட 5 கிராமங்களை மரங்களால் சோலைவனமாக்கவும், 2 லட்சம் விதைப்பந்துகளைத் தயாரித்து பொருத்தமான இடங்களில் வீசி மேலத்திடியூர் பகுதியை அதிக மழை பொழியும் வளமிக்க பகுதியாக மாற்றவும் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
விதைப்பந்துகள் எறிதலின் போது ஆயிரக்கணக்கில் பனை விதைகளையும் நடும் யோசனையைப் பல்கலைக்கழக இயக்குநர் செல்வகுமார் முன்வைத்தார். மேலும் விதைப்பந்துகள் தயாரிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பணிகளைப் பாராட்டிப் பேராசிரியைகள் ஜோசபின் சுதா மற்றும் சிவசக்தி ராணி ஆகியோருக்கு “பசுமைப் போராளி விருதுகள்” வழங்கப்பட்டன. பல்கலைக்கழகத் தலைவர் கல்வியாளர் பி. சுயம்பு இப்புதிய பசுமை முயற்சிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிறைவாக இயற்பியல் பேராசிரியை சிவசக்தி ராணி நன்றி கூறினார்.

