தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (46). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பொய்யாழி முத்து என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான எல்லைப் பிரச்சினையில் நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி தனது தோட்டத்தில் விவசாய வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த பொய்யாழி முத்து மற்றும் அவரது 3 மகன்கள் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியைக் கடுமையாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி காவல் நிலையப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய பொய்யாழி முத்துவின் மகன்களான பொன்ராஜ் (32) மற்றும் பொன்னுத்துரை (29) ஆகிய இருவரைச் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பொய்யாழி முத்து மற்றும் அவரது மற்றொரு மகனைப் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.