தமிழக சட்டமன்றத்தில் 'மிசா' சட்டப் பிரிவு கைது மற்றும் சிறைக் கொடுமைகள் குறித்துத் தன்னுடைய உடல்மொழி மூலம் கேலி செய்யும் விதமாகக் கருத்து தெரிவித்ததாக எழுந்த சர்ச்சைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றின் மூலம் விளக்கமளித்துப் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக-வின் 'மிசா' வரலாற்றுப் பின்னணியைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், எதேச்சையாகத் தனது கையால் தாடையைப் பிடித்துக் காட்டும் உடல்மொழியை வெளிப்படுத்தினார். இந்தச் செய்கை, அவசரநிலைக் காலத்தில் 'மிசா' சட்டத்தில் கைது செய்யப்பட்டுத் தாடை எலும்பு முறிய அடிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைக் கேலி செய்வது போல் இருப்பதாகக் கூறி திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, சட்டமன்றத்தில் தனது பதில் உரையின் போது எதேச்சையாக வெளிப்பட்ட அந்த உடல்மொழி எந்தவித உள்நோக்கமும் கொண்டதல்ல என்றும், தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுப் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: "சட்டமன்றத்தில் நடந்த சில சர்ச்சைகள் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தம்பி விஜய் நீங்க சொல்றது உண்மை தான், பொய் அல்ல. அவசரநிலைக் காலத்தில் மெரினா கடற்கரையில் கலைஞர் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு, 1976-இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு நான் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டேன்.

சிறையில் தொழுநோயாளிகள் இருக்கும் இடத்தில் 10 பேருடன் அடைக்கப்பட்டு, தூங்கவிடாமல் போலீஸ் லத்தியாலும் பூட்ஸ் கால்களாலும் மிதிக்கப்பட்டோம். அந்தத் தாக்குதலில் எம்பி சிட்டி பாபு சிறையிலேயே உயிரிழந்தார். அவர்கள் அடித்ததில் எனது தாடை எலும்பும் உடைந்தது. நீங்கக்கூட கை வைத்துத் தாடையைக் காண்பித்தீர்கள் அல்லவா? அது சரிதான். நான் அடி வாங்கிய தழும்புகள் இன்றைக்கும் என்னிடம் இருக்கின்றன." என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது உரையில், "பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் மற்றும் போராளிகள் அனைவரும் இதுபோன்ற அடக்குமுறைகளைக் கடந்துதான் வந்துள்ளோம். என்னை நேரில் சந்தித்தபோது தவறாகப் பேசியதற்கு 'ஐ அம் சாரி' என்று கூறிய நீங்கள், அதை மறந்துவிட்டீர்கள் போல. முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் உங்கள் வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும்; நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம்.

சட்டமன்றத்தை 'ரீல்ஸ்' மன்றமாக மாற்றாமல், தமிழ்நாடு முன்னேற விவாதம் செய்யுங்கள். அமலாக்கத்துறை மற்றும் சார்க்காரியா கமிஷன் வழக்குகளின் உண்மைத் தன்மையை அறிய நூலகத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளுங்கள். மக்களின் தேவைகளான பயிர்க்கடன் தள்ளுபடி, வாக்குறுதி அளித்த இலவச கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்துங்கள்" என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.