வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், ரூ.2,000-க்கு மேற்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் வணிகர் விரோதப் போக்கைக் கண்டித்தும், அகில இந்திய வியாபாரிகள் சங்க கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

அந்நியப் பொருட்களையும் வரிகளையும் எதிர்த்துப் போராடிய தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்டோபர் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் அனைவரும் தங்கள் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஒரு நாள் முழுவதும் நிறுத்திவிட்டு, ரொக்கப் (Cash) பணப் பரிவர்த்தனையை மட்டுமே மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான தகவலைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் கடைகளில் அறிவிப்புப் பலகைகளை வைக்குமாறும் பேரவை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 7-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.