தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கோமான்புதுரைச் சேர்ந்தவர் ஆனந்த் (54). இவருக்கு மனைவி மரிய கலா (53), இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஆனந்திற்குத் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று ஆனந்த் தனது மனைவி மரிய கலாவிடம் மது குடிக்கப் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஆனந்த் அருகில் இருந்த மதுபாட்டிலால் மனைவி மரிய கலையைக் குத்த முயன்றுள்ளார்.
பெற்றோருக்கு இடையே நடைபெற்ற இத் தகராறை விலக்கி விடவும், தாயைக் காப்பாற்றவும் அவர்களின் மூத்த மகன் வனமகேஷ் குறுக்கே வந்து தடுத்துள்ளார். அப்போது ஆத்திரம் தீராத ஆனந்த், கையில் வைத்திருந்த மதுபாட்டிலால் மகன் வனமகேஷை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த வனமகேஷை, அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச் சம்பவம் குறித்து மரிய கலா அளித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி காவல் நிலையப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ஆனந்தை தேடி வருகின்றனர்.

