தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் ஒரு கூட்டணியைக் கட்டமைக்க முனைப்புக்காட்டியது. முதல் முயற்சியாக கடந்த ஜூலை 1ம் தேதி, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைப்பதன் தொடக்கமாகவும் கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்கவில்லை. அதேநேரம், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட ஆதரவுக் கட்சிகள் பங்கேற்றன. இந்நிலையில், கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று கூட்டணிக்கு பெயர் வைக்க தோழமைக் கட்சிகளுடனான இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை பனையூர் தவெக அலுவலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடந்தது. இதில் முதல் கூட்டத்தில் பங்கேற்காத இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் நேற்று முதல்வர் விஜய் தலைமையில் பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் ஆதரவுக் கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி, தாரகை கத்பர்ட், விசிக சார்பில் திருமாவளவன், வன்னிஅரசு, சிந்தனைச் செல்வன், ரவிக்குமார், மதிமுக சார்பில் வைகோ, துரை வைகோ, ஐயூஎம்எல் சார்பில் காதர் மொய்தீன், ஷாஜகான், சையத் பரூக் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் தவெக தலைமையில் கூட்டணி அமைத்து வரும் இடைத்தேர்தல் சந்திக்க திட்டமிட்டு, கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டது. பின்னர் கூட்டணி கட்சித் தலைவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
விசிக தலைவர் திருமாவளவன்: இதுவரை ஆதரவு கட்சிகளாக இருந்த நாங்கள் இன்று முதல் கூட்டணிக் கட்சிகளாக பரிணாமம் அடைந்துள்ளோம். முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருமனதாக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என பெயர் சுற்றியுள்ளோம். இடைத்தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் என தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல மதச்சார்பின்மை சமூக நீதி உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி ஆகும் என்றார்.
ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன்: தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருமனதாக கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கூட்டணிக் கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்கி சாதனை புரிந்துள்ளார், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி வரலாற்று சாதனை படைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தவெக கட்சி பெயரில் வெற்றி உள்ளதுபோல், தற்போது அரசு திட்டங்களில் ‘வெற்றி’ என்ற வார்த்தையை சேர்த்து வரும் நிலையில், புதிய கூட்டணி பெயரிலும் வெற்றியை சேர்த்து உள்ளனர்.

