விளாத்திகுளம் பகுதியில் பிளஸ்-2 மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பெற்றோர் அளித்த புகாரைப் பெறுவதில் அலட்சியம் காட்டிய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா கட்டாய பணி ஓய்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பள்ளி மாணவியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், புகாரைப் பெறுவதில் அலட்சியம் காட்டிய பெண் இன்ஸ்பெக்டருக்குக் கட்டாய பணி ஓய்வு வழங்கி நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த 10.3.2026 அன்று அரசுப் பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பினார். பின்னர் மாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காகக் காட்டுப்பகுதிக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர்.
அப்போது குளத்தூர் போலீசார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்புவதும், அங்கு சென்றால் குளத்தூருக்கு அனுப்புவதுமாக இன்ஸ்பெக்டர் பிரவீனா மற்றும் போலீசார் அவர்களை அலைக்கழித்துள்ளனர். உரிய நேரத்தில் துரித நடவடிக்கை எடுக்காததால், மறுநாள் மாலை மாணவி காட்டுப்பகுதியில் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் ஆத்திரமும் அதிர்ச்சியும் ஏற்பட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடியான தர்ம முனீஸ்வரன் (37) என்பவரைப் போலீசார் கடந்த 19.3.2026 அன்று கைது செய்தனர். ஏற்கனவே மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்தபோது அவர் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கை விசாரித்த தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, கடந்த 25.5.2026 அன்று குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.
மாணவி மாயமானது குறித்துப் புகார் அளிக்க வந்த பெற்றோரை அவமதித்து, அலட்சியப்படுத்திய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே அவர் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பணியில் தீவிர அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் பிரவீனாவை நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு கட்டாய பணி ஓய்வு செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

