தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவரது பிறந்த ஊரான குஜராத்தின் போர்பந்தரையும், அவரது அஸ்தி கரைக்கப்பட்ட புண்ணியத் தலமான கன்னியாகுமரியையும் இணைக்கும் வகையில் நேரடி ரயில் சேவை இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கடல்களும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் மகாத்மா காந்திஜியின் நினைவாக ஒடிசா கட்டிடக்கலை பாணியில் 1956-ஆம் ஆண்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. காந்திஜியின் மறைவைக் குறிக்கும் வகையில் 79 அடி உயர மையக் கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தில், ஆண்டுதோறும் அண்ணலின் பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று, சூரியக் கதிர்கள் நேரடியாக அஸ்தி வைக்கப்பட்ட பீடத்தில் விழும்படித் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1948 பிப்ரவரி 12-ஆம் தேதி காந்திஜியின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் முறைப்படி கரைக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மண்ணிற்கு காந்திஜியின் பெருமையை மேலும் சேர்க்கும் வகையில் நேரடி ரயில் சேவை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

ரயில்வே வாரியத்திற்கு வைக்கப்படும் கோரிக்கைகள்:

தற்போது போர்பந்தரிலிருந்து திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) வரை வாராந்திர எக்ஸ்பிரஸ் (19261/19262) ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இச் சேவையைத் திருவனந்தபுரத்துடன் நிறுத்தாமல், மேலும் 85 கி.மீ. தொலைவில் உள்ள கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டப் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் நீட்டிப்பு ஆலோசனைகள்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் முனைய வசதிகள் மற்றும் பிட்-லைன் (Pit line) பணிகள் நிறைவடைந்துள்ளதால், சனிக்கிழமை மாலை திருவனந்தபுரம் வரும் ரயிலை இரவு 8:30 மணிக்குக் கன்னியாகுமரி சென்றடையுமாறு காலஅட்டவணையை அமைக்கலாம்.

பராமரிப்பு மற்றும் நேரம்: நாகர்கோவிலில் இரவுநேரப் பராமரிப்புப் பணிகளை முடித்துவிட்டு, ஞாயிறு காலை 6:30 மணிக்குக் கன்னியாகுமரியிலிருந்து போர்பந்தருக்குத் திரும்பும் வகையில் இச் சேவையைத் திட்டமிடலாம்.

திருநெல்வேலி - ஜாம்நகர் தடம்: வாரத்தில் 5 நாட்கள் காலியாக உள்ள திருநெல்வேலி - ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் (19578/19577) ரயிலின் அதே நேர அட்டவணையைப் பயன்படுத்தி இப் புதிய நீட்டிப்பைச் சாத்தியப்படுத்தலாம்.

மேலும், அண்ணல் காந்திஜியின் தியாகத்தையும் வரலாற்று நினைவுகளையும் போற்றும் வகையில், இச் சிறப்பு ரயிலில் காந்தியப் புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளைக் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.