தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (01.10.2026), தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தன்னார்வ இரத்த தான கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதி தேசிய தன்னார்வ இரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கம் இரத்த தானத்தின் அவசியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, தன்னார்வத்துடன் இரத்த கொடை வழங்கும் கொடையாளர்களை கௌரவிப்பது ஆகும்.

ஆகவே, தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்து உயிர்களை காப்பதுடன், மனித நேயத்தின் உயரிய மாண்பை நிலைநாட்டும் அனைத்து இரத்த கொடையாளர்களுக்கும் தேசிய தன்னார்வ இரத்த தான நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு சூழல்களில் உயிர்களை காப்பது இரத்த தானம் இன்றியமையாதது. ஒவ்வொரு சொட்டு இரத்தமும் ஒரு மனிதனின் உயிரை காப்பதுடன் மட்டுமல்லாது குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாக்கிறது. ஆகவே, தொடர்ந்து இரத்த தானம் செய்யுங்கள். பல உயிர்களை காத்திடுங்கள் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் மரு.கலைவாணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பத்மநாபன், இரத்தவங்கி மருத்துவ அலுவலர் மரு.சாந்தி, முதுநிலை ஆய்வக நுட்பனர் முத்து ஜெயந்தி, மருத்துவர்கள், தன்னார்வ இரத்த தான கொடையாளர்கள் ஆகியோர் உள்ளனர்.