தூத்துக்குடி மாநகராட்சியில் LR காப்பி (Land Record Copy) வழங்கும் நடைமுறையில் குளறுபடிகள் உள்ளதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.

நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களை பத்திர பதிவு செய்ய முக்கிய ஆவணங்களில் LR காப்பியும் அவசியம் ஆகும் . நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு, பரப்பளவு, நிலத்தின் வகைப்பாடு உள்ளிட்ட பதிவுசார் விவரங்களை அறிந்து கொள்ளவும், நிலம் தொடர்பான பல்வேறு பணிகளுக்கும் இந்த ஆவணம் பயன்படுத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி வாயிலாக பொதுமக்களுக்கு LR காப்பி வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இனி பழைய ஆவணங்கள் முறைப்படி கையால் எழுதபட்ட ஆவணங்கள் இல்லாமல் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்க வேண்டும் என வருவாய்த்துறை AD., அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த அறிவுறுத்தலுக்குப் பின்னரும் மாநகராட்சி வாயிலாக கையேடு முறையில் LR காப்பி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி மாதத்திற்கு முன்பே LR காப்பி பெறுவதற்காக விண்ணப்பம் அளிக்கப்பட்டதாகக் கூறி, அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் தற்போது கையேடு முறையில் ஆவணங்கள் வழங்கப்படுகிறதா? அப்படியானால், அந்த விண்ணப்பங்கள் உண்மையில் எப்போது பெறப்பட்டன, யார் அனுமதி வழங்கினர், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் தற்போது LR காப்பிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் பிப்ரவரி மாதத்திற்கு பின்பு கையால் எழுதப்பட்ட LR காப்பி வைத்து பத்திரபதிவு செய்யக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் சார்பதிவாளர் எதன் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்தார்.

இதனால் மாநகராட்சிக்கு பெரும்வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கிய அதிகாரி யார்? எந்த கோப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது? என்பது குறித்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டும்.

விதிமீறல் அல்லது தவறு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால், அதற்கு பொறுப்பான அதிகாரிகள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், LR காப்பி வழங்கும் நடைமுறையை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றி, விண்ணப்பித்த தேதி, அனுமதி வழங்கிய அதிகாரி, ஆவணம் வழங்கப்பட்ட தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளிப்படையாக பதிவாகும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.