தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான தட்டாரம்படம் அருகே சொக்கன்குடியிருப்பில் அமைந்துள்ள அதிசய மணல் மாதா ஆலயத்தின் 228-ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
திருவிழா தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டுத் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திருப்பலியில் பங்கேற்ற குருக்கள் மற்றும் இறைமக்கள் முன்னிலையில் ஆலயக் கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தையர்கள் லியோன், ரெக்ஸ், நிலவன் உள்ளிட்ட ஏராளமான அருட்பணியாளர்கள் மற்றும் பங்கு இறைமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
26-ஆம் தேதி சப்பரப் பவனி:
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத் திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும், மதியம் 12 மணிக்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் மாலை ஆராதனையும் நடைபெற உள்ளன.
விழாவின் 9-ஆம் திருவிழாவான வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் மாலை ஆராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, இரவு 12 மணிக்கு அன்னையின் மின் அலங்காரத் தேர் (சப்பர) பவனி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
10-ஆம் திருவிழாவான செப்டம்பர் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்குத் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமையில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அன்னையின் சப்பரப் பவனியும், தென்மண்டல இளைஞர்களின் ‘எழுச்சி விருந்து’ என்ற சிறப்பு கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
விழா ஏற்பாடுகளை ஏற்பாடுகளைச் சொக்கன்குடியிருப்பு பங்குத்தந்தை ஜான் டிரிட்டோ, உதவி பங்குத்தந்தை அந்தோணி தலைமையில் நிதிக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

