தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளரும், நகரமன்றத் தலைவருமான (பொ) ஆர்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தார். மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் விநாயகா ஜி. ரமேஷ் முன்னிலை வகித்தார்.

இக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கலந்து கொண்டு, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிப் பேசினார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ எம்.பி. கூறியதாவது: "மக்கள் சார்ந்த பிரச்சினைகளைக் கையில் எடுத்துப் போராடவும், தமிழகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கவுமே மதிமுக தொடங்கப்பட்டது. மதிமுகவை அழிக்க வேண்டும் என 33 ஆண்டுகளாக திமுக முயற்சி செய்து வருகிறது. ஆனால், தமிழக நலன்களுக்காகத் தொடர்ந்து பயணித்து வரும் இப் பேரியக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

லஞ்ச லாவண்யமற்ற நேர்மையான ஆட்சியை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். நாம் என்ன மாதிரியான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்தோமோ, அதை த.வெ.க. சாத்தியமாக்கியுள்ளது. இந்த நேர்மறை மாற்றத்திற்கு மதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும்.

வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் த.வெ.க. மற்றும் அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில் த.வெ.க. அமோக வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் மீது மக்களுக்குத் தீவிர அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், அக் கட்சி டெபாசிட் இழக்கவும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் நகரச் செயலாளர் பால்ராஜ், வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர்கள் தெய்வேந்திரன், பவுன் மாரியப்பன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எல்.எஸ். கணேசன், ஒன்றியச் செயலாளர்கள் சரவணன், கேசவ நாராயணன், மாரிசாமி, ராஜகோபால், குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவி விஜயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.