துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற 'ஃபிளை துபாய்' விமானத்தைக் கடத்தி தரையில் மோதி நொறுக்க முயன்ற துணை விமானியின் தாக்குதலை முறியடித்து 180 பயணிகளைக் காப்பாற்றிய இந்திய சேர்ந்த விமானி ஸ்மித் மச்சாரை, 'உண்மையான ஹீரோ' எனப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானம் புறப்பட்டது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, காக்பிட் அறையில் இருந்த துணை விமானி திடீரென விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தித் தாக்கியுள்ளார்.

பின்னர் விமானத்தைக் கடத்தி தரையில் மோதி விபத்துக்குள்ளாக்கத் துணை விமானி முயன்றுள்ளார். பலத்த காயமடைந்த நிலையிலும், மன உறுதியுடன் போராடிய கேப்டன் ஸ்மித் மச்சார், சாமர்த்தியமாகச் செயல்பட்டு விமானத்தைச் சவுதி அரேபியாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கி 180 பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி: "கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ. காயமடைந்த சூழலிலும் பயணிகளின் உயிரைக் காக்க அவர் காட்டிய துணிச்சலையும் மன உறுதியையும் எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவரது வீரதீர செயல் பெருந்துயரைத் தடுத்துள்ளது. அவர் விரைந்து குணமடையப் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: "கத்திக்குத்து காயத்தால் மோசமான நிலையிலிருந்த போதிலும், சமயோசித புத்தியுடன் செயல்பட்டுப் பேரழிவைத் தடுத்த அந்த இந்திய விமானி உண்மையிலேயே ஒரு ஹீரோதான்" எனப் பாராட்டியுள்ளார்.

சாமர்த்தியமாகச் செயல்பட்டுத் தங்களைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.