» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் 135 அரசு பள்ளிகளில் நூற்றாண்டு விழா: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
திங்கள் 27, ஜனவரி 2025 5:35:22 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 135 அரசு பள்ளிகளின் நூற்றாண்டு விழாவினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தோவாள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுடர்ஒளி ஏற்றி துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (27.01.2025) சுடர்ஒளி ஏற்றி மாணவ மாணவியர்களிடையே பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைங்கிணங்க, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரையின் படி மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 135 அரசுப்பள்ளிகளிலும் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியினை இன்று தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் கலந்து கொண்டு துவக்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அரசுப்பள்ளிகள் நூறு ஆண்டுகள் கடந்து நூற்றாண்டு விழாவினை நோக்கி செல்லும் இத்தருணத்த்திலும் இப்பள்ளியில் 1000 மாணவ மாணவியர்களுக்கு மேல் படிப்பது, இப்பள்ளியின் கல்விப்பணியை எடுத்துக்காட்டுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரை கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் மாவட்டமாகும். இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களான தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினராகவும், மரு.அஜீஸ் அரசு மருத்துவராகவும், கிருஷ்ணசுவாமி பொதுப்பணித்துறை உதவி கோட்டபொறியாளராகவும், மணிகண்டன், மற்றும் நீலகண்டன் தலைமையாசிரியராகவும், வேலாயுதம் பிள்ளை இஸ்ரோ கௌரவ ஆலோசகராகவும், இன்னும் பலர் பல்வேறு உயர் பதவிகளில் வகித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, நமது பெருமையின் அடையாளம் என்று அடிக்கடி கூறுவார்கள். அதைப்போன்று அரசுப்பள்ளிக்களுக்கு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவ மாணவர்களை தங்கள் குழந்தைகளாக பாவித்து, அவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்கள். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் நிச்சயமாக நல்ல நிலைமையில் தான் இருப்பார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இஸ்ரோ செயலராக நமது கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த விஞ்ஞானி நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களும் அரசுப்பள்ளியில் தான் படித்தார்கள். இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் 3வது இடத்தில் உள்ளது.
தோவாளை அரசு ஆரம்ப பள்ளி 1882 ஆம் ஆண்டும், அரசு உயர்நிலைப்பள்ளி 1960 ஆம் ஆண்டும், மேல்நிலைப்பள்ளி 1980ம் ஆண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் வரை தொடக்கப்பள்ளியில் 135 மாணவ மாணவியர்களும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 756 மாணவ மாணவியர்கள் வரை படித்துக்கொண்டிருக்கிறீர்கள். 2023-2024 ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97 சதவீதமும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். 2024-2025ம் ஆண்டு கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று தருமாறு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்களை கேட்டுக்கொள்கிறேன். அதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
2023-2024 ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோகுல் பிரதாப் என்ற மாணவன் 490 மதிப்பெண்கள் பெற்று, கணிதத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளார்கள். மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்வீட்டி ஜே 572 மதிப்பெண் பெற்று, தாவரவியலில் முழு மதிப்பெண் பெற்றுள்ளார்கள். தொடர்ந்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நம்பள்ளியில் படித்த 5 மாணவர்கள் உயர்கல்விக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் மேரி அஸ்மிதா என்ற 11ம் வகுப்பு மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் வெற்றிப்பெற்று, தற்போது மலேசியா சென்று தனது திறமைகளை வெளிப்படுத்த உள்ளார்கள். தொடர்ந்து சுந்தர் என்ற 11ம் வகுப்பு மாணவர் மாநில அளவிலான வாட்டர் போலோ போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இருவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 8ம் வகுப்பு மாணவிகள் ஈவ்லின் ஜெமி மற்றும் வித்யா மகாலெட்சுமி ஆகியோர் மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்று, மாநில அளவில் திருச்சியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்குபெற்றுள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் என்ற இரு முக்கியமான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், பொதுஅறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே அனைத்து மாணவர்களும் நன்றாக படித்து, சமூகத்தில் நல்ல ஒரு நிலைக்கு வர வேண்டும். எந்தவொரு தீயபழக்கத்திற்கும் ஆளாகாமல் நல்ல மாணவ மாணவியர்களாக திகழ வேண்டும். மேலும் நீங்கள் வாழ்க்கையில் சாதிக்கும் போதும் நமது குடும்பத்தையும், நம்முடைய சமூகத்தையும், நம்முடைய மாவட்டத்தையும் பெருமைப்படுத்தும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்கள். முன்னதாக பள்ளி மாணவர்கள் சுடர்ஒளியினை பவணியாக எடுத்து வந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அவர்களிடம் வழங்கியதையொட்டி, சுடர்ஒளியினை ஏற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் கிறிஸ்டல் ஜாய்லெட், தலைமையாசிரியர் எஸ்.சாந்தி, முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், முன்னாள் தோவாளை ஊராட்சிமன்ற தலைவர் நெடுஞ்செழியன், ஆசிரியர்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள், மாணவ மாணவியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.