» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!

சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாய்கள், வெள்ளநீர் கால்வாய்கள் மற்றும் குளங்களின் மதகுகளை நேரில் ஆய்வு செய்து, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகத் தேவையான சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அளித்துள்ள மனுவில் "தாமிரபரணி ஆற்றின் மூலம் மருதூர் மேலக்கால்வாய், கீழக்கால்வாய் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் வாய்க்கால்கள் வழியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட வறட்சிப் பகுதிகளின் குடிநீர் தேவைக்கும் இந்த நீர்நிலைகளே முக்கிய ஆதாரமாக உள்ளன.

தற்போது தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் மாவட்டத்தில் பெரும்பாலான பாசனக் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் கார் பருவ சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கிணறுகளிலும் நீர்மட்டம் சரிந்துள்ளது. எனவே விவசாயிகள் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது தாமிரபரணியில் அதிகளவு நீர்வரத்து இருந்தபோதிலும், கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தால் சுமார் 9 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்தது. இதனால் சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு, சடையனேரி கால்வாய்க்குப் போதிய தண்ணீர் கிடைக்காமல் வறட்சி நிலவியது.

எல்-நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, அனைத்து பாசனக் கால்வாய்களையும் தூர்வாரிச் சீரமைக்கவும், குளங்களில் சேதமடைந்துள்ள மதகுகளைப் பழுதுபார்க்கவும் மாவட்ட நிர்வாகம் தற்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, சாத்தான்குளம் மற்றும் உடன்குடி பகுதிகளில் உள்ள புத்தன்தருவை, வைரவன்தருவை, தாங்கைகுளம், சடையனேரிகுளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பெரிய குளங்களையும், தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வெள்ளநீர் கால்வாய்களையும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டால் மட்டுமே மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான நீர் சேமிப்பை உறுதி செய்து, வருங்கால வறட்சி பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory