» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓமன் கடலில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் நல்லடக்கம்: குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி!
வியாழன் 25, ஜூன் 2026 7:41:46 AM (IST)
ஓமன் நாட்டுக் கடற்பகுதியில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி நிஷாந்த்தின் உடல் 14 நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு நேற்று புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமி நிஷாந்த் (35), ரோமனா ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான 'எம்.டி. செலஸ்டியல்' என்ற வணிகக் கப்பலில் இரண்டாம் நிலை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
வளைகுடா கடல் பகுதியில் பயணித்த வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்த பதற்றமான சூழ்நிலையில், இக்கப்பல் ஓமன் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கடந்த ஜூன் 8ஆம் தேதி நிஷாந்திற்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுத் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து கப்பல் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, உள்ளூர் துறைமுகத்திடம் இருந்து மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், கப்பல் ஊழியர்களால் உள்ளூர் துறைமுக நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையே நிஷாந்த்தின் உடல்நிலை மேலும் மோசமடைந்து, முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காமலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரும், இந்தியாவின் மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கமான எஃப்எஸ்யூஐ (FSUI) அமைப்பும் குற்றம் சாட்டியுள்ளனர். உயிரிழந்த நிஷாந்திற்கு சரோபின் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
மாலுமி நிஷாந்த்தின் உடல் உயிரிழந்து 14 நாட்களுக்குப் பிறகு விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தூத்துக்குடி குரூஸ்புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்குக் குடும்பத்தினர், மாலுமிகள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, லூர்தம்மாள்புரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரம் குறித்து நிஷாந்த்தின் மனைவி சரோபின் அளித்த மனுவை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருக்குப் பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் சரோபினுக்குத் தூத்துக்குடி மீன் வளர்ச்சிக் கழக மேலாளர் அலுவலகத்தில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணி வழங்க மேலாண்மை இயக்குநர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான பணி நியமன ஆணையை கடந்த வாரம் அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: கரு நாகராஜன் பங்கேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:28:11 AM (IST)

இந்திய வீல்சேர் கிரிக்கெட் பிரீமியர் லீக்: ஜம்மு காஷ்மீரை வீழ்த்தித் தமிழ்நாடு அணி சாம்பியன்!
வியாழன் 25, ஜூன் 2026 11:04:23 AM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 32 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்!
வியாழன் 25, ஜூன் 2026 10:52:22 AM (IST)

குடும்பப் பிரச்சினை: பூச்சி மருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:44:22 AM (IST)

மாலுமி நிஷாந்த் மனைவிக்குத் தற்காலிகப் பணியா..? நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் கண்டனம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:38:02 AM (IST)

அனுமதியற்ற விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!
வியாழன் 25, ஜூன் 2026 10:17:14 AM (IST)








